அ.தி.மு.க. அணிகள் இணைப்பால் கட்சிக்கும், ஆட்சிக்கும் சோதனை: தனியரசு பேட்டி

ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணிகள் இணைந்துள்ளதால் கட்சிக்கும் ஆட்சிக்கும் சோதனை என்று காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ. தனியரசு கூறினார்.
அ.தி.மு.க. அணிகள் இணைப்பால் கட்சிக்கும், ஆட்சிக்கும் சோதனை: தனியரசு பேட்டி
Published on

நாமக்கல்:

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனரும், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தனியரசு நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. பல்வேறு அணிகளாக பிளவுபட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் கட்சி சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

கட்சியை இணைக்கும் போது தினகரனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோளாக இருந்தது. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இணைவதில் மாற்றுக்கருத்து இல்லை, அதுதான் எங்கள் நிலைபாடும், இணைந்ததை வரவேற்கிறோம்.

ஆனால் கழகத்தின் பொதுச்செயலர் சசிகலா, துணை பொதுச்செயலர் தினகரன் மற்றும் 19 எம்.எல்.ஏ.க்களை நிராகரித்துவிட்டு இந்த இணைப்பு நடத்தியிருப்பது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

இந்த இணைப்பு கட்சியையும், ஆட்சியையும் வலிமைப்படுத்துவதற்கு பதில் மீண்டும் ஒரு கடுமையான சோதனைக்கு, பலவீனத்துக்கு இட்டுச் சென்றுள்ளது. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இணைந்துள்ள இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தினகரன் மற்றும் பொதுச்செயலாளரின் கருத்துக்களை அறிந்து அவர்களுக்கும், அமைச்சரவையிலும் கட்சியிலும் அதிகாரத்தை பகிர்ந்து 3 பேரும் இணைந்து, கட்சிக்கும், ஆட்சிக்கும் வலிமை சேர்க்க பணியாற்ற வேண்டும்.

இச்சூழ்நிலையில் சட்டப்பேரவையில் அரசின் பெரும்பான்மையை நிருபிப்பதற்கான, சூழல் வருமானால் அந்த நேரத்தில் எங்கள் அமைப்பின் மூத்த நிர்வாகிகள், தோழமை கட்சிகளுடன் பேசி நல்ல முடிவை எடுப்போம். எங்கள் முடிவு இந்த கழகத்துக்கும், அரசுக்கும் வலிமை சேர்ப்பதற்கான முடிவாக இருக்கும்.

ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவரும் இணைந்துதான் பொதுச்செயலராக சசிகலாவையும், துணை பொதுச்செயலராக தினகரனையும் தேர்வு செய்தனர். தற்போதைய சூழ்நிலையில் இருவரும் தங்களது நிலைப்பாட்டை மாற்றி இருப்பதை பொதுமக்களும், கட்சியினரும் சந்தேகிக்கின்றனர்.

அந்த சந்தேகத்துக்கு இடம் அளிக்காமல், அவர்களுக்கும் உரிய மரியாதை தரவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அவர்கள் 3 பேரும் இணைந்து, கட்சியையும், ஆட்சியையும் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com