தங்க தமிழ்செல்வன் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா - முக ஸ்டாலின் பங்கேற்பு

தங்க தமிழ்செல்வன் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழாவில் முக ஸ்டாலின் கலந்துக் கொள்கிறார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

ஆண்டிப்பட்டி:

அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ்செல்வன் பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டார். மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவில் அவர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் தினகரனுக்கும் தங்கதமிழ்செல்வனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பின்னர் கட்சியில் இருந்து விலகபோவதாக அறிவிப்புகள் வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

அ.ம.மு.க.வில் இருந்தவரை அவர் அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து ஏதாவது ஒரு கருத்தை தெரிவித்து வருவார். அது அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வரும்.

ஆனால் தி.மு.க.வில் இணைந்தபிறகு தங்கதமிழ் செல்வன் எந்தவித பேட்டியும் கொடுக்காமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவர்கள் அனைவரையும் தி.மு.க.வில் சேர்க்கும் வகையில் தேனியில் பிரம்மாண்ட விழா நடத்த முடிவு செய்துள்ளார்.

இதற்காக தேனி வீரபாண்டி தனியார் கல்லூரி அருகே வருகிற 21-ந் தேதி விழா நடைபெறுகிறது. இதற்காக பந்தல்கால் நடப்பட்டு மேடை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

தேனி மாவட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும், தினகரனுக்கு எதிராகவும் தி.மு.க.வை பலப்படுத்தும் முயற்சியில் தங்கதமிழ்செல்வன் இதன்மூலம் முழுமூச்சாக இறங்கி செயல்பட உள்ளார். அதனையடுத்து அவருக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com