எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் மத்திய அரசின் ஏஜெண்டுகள் - தங்கதமிழ்செல்வன்
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள அம்பரப்பர் மலையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து டி.புதுக்கோட்டை, பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தை வஞ்சிக்கும், தமிழக மக்கள் எதிர்க்கும் திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்த துடிக்கிறது. அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் போன்ற தேவையான பிரச்சினைகளை நிறைவேற்றித் தர மறுத்து வருகிறது.
மக்கள் நலனில் அக்கறை இல்லாத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மத்திய அரசின் ஏஜெண்டுகளாகவே செயல்படுகின்றனர். நியூட்ரினோ ஆய்வு மையத்தை மோடி ஏன் குஜராத்தில் செயல்படுத்தவில்லை?
மக்களை பாதிக்கும், விவசாயத்தை அழிக்கும் எந்த திட்டத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதனால் அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரன் தலைமையில் பொட்டிபுரத்தில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் 1 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள். இந்த திட்டத்தை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

