

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் தேனி மாவட்ட மக்களை விரைவில் சந்திக்க உள்ளார்.
தேனி மாவட்டத்தில் 2½ லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இன்னும் புதிய நிர்வாகிகள் சேர்க்கப்பட்டு கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக தொகுதி பக்கமே எட்டிபார்க்காத ஓ.பன்னீர்செல்வம் தற்போது ஊர் ஊராக சென்று மக்களிடம் மனுக்கள் வாங்கி வருகிறார். அவர் ஏற்கனவே வாங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தாரா?
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு முறைப்படி இடைத்தேர்தல் நடத்த வேண்டும். மத்திய-மாநில அரசுகள் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தினால் தான் உண்மையாகவே மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என தெரிய வரும்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதன் மூலம் அடுத்து வர உள்ள பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு இது முன்னோட்டமாக அமையும்.