

கோவை:
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கோவை கொடிசியா மைதானத்தில் வாழ்வுரிமை மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் சையது அகமது வரவேற்றார்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மவுலானா நாசர், அவைத் தலைவர் நாசர் உமரி, இணைப் பொதுச் செயலாளர் ரிபாயி, பாதிரியார் ஜெகத்கஸ்பர், அலிகார் பல்கலை கழக மாணவர் பேரவை செயலாளர் ஹூசைவா அமீர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை செயலாளர் சதீஷ் யாதவ், ஏ.எம். யு. மாணவர் பேரவை உறுப்பினர் கவுதம், திப்பு சுல்தானின் கொள்ளு பேரன் பக்தியார் அலி சாகிப், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
மாநாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., பேசியதாவது:-
நாட்டின் ஜனநாயகத்தை சீரழிக்கும் சக்திகளுக்கு எச்சரிக்கவே இந்த மாநாட்டை நடத்துகிறோம். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. இந்த நாடு வேலையில்லா திண்டாட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தொழிற்சாலைகள் மூடப்பட்டு கொண்டிருக்கிறது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உள்ளது. இதனை திசை திருப்பவே இந்திய குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது,
என்.ஆர்.சி.யால் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பல லட்சம் பேர் இந்து மக்கள். அவர்களுக்கு சேர்த்துதான் இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். மக்களை பிளவுபடுத்தும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இந்த சட்டங்கள் அனைத்தையும் தொடர்ந்து எதிர்ப்போம். டெல்லியில் அமைதியாக போராடிய மக்கள் மீது வன்முறை கையாளப்பட்டுள்ளது. வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அமித்ஷா அமைதி காத்தார். நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். தமிழக அரசுக்கு ஒரு விண்ணப்பம். இந்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் ஒருநாளும் பின்வாங்க மாட்டோம். சரணடைய மாட்டோம்.
தமிழக அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கேரளா உள்பட பிற மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் என்பது மத அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு சர்வதேச ஒப்பந்தத்திற்கு எதிரானது இதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்டவை நாட்டில் பிரிவினைகளையும், பாகுபாடுகளையும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. எனவே இவற்றை அமல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கோவை மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ், ஷாஜகான், பதுருதீன், காஜா, சுலைமான், முஸ்தபா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நிகழ்ச்சியை மாநில துணை பொதுச்செயலாளர் தைமியா தொகுத்து வழங்கினார். முடிவில் மாவட்ட செயலாளர் எம்.எச். அப்பாஸ் நன்றி கூறினார்.