

திருப்பத்தூர்:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் முடப்பட்டன. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகங்களை மாணவ-மாணவிகளுக்கு வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டது.
அதன்படி நேற்று அனைத்து அரசு பள்ளிகளில் தயாராக இருந்த பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் பணி தொடங்கியது. அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து பள்ளிகளுக்கு வரவழைத்தனர். நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 31 ஆயிரத்து 308 பேருக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. பாடப்புத்தகம் வழங்கும் பணியை திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கலெக்டர் சிவன்அருள் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுடைய மடிக்கணினியை வாங்கி, பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கி உள்ள கல்வி சம்பந்தமான சாப்ட்வேர்கள் மற்றும் தகவல்களை பதிவிறக்கம் செய்து வழங்க உள்ளோம். இன்னும் ஒருசில நாளில் அவர்களுக்கு வழங்கப்படும்.
மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 545 ஆசிரியர்களும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 650 ஆசிரியர்களும் கணினி மூலம் வகுப்புகளை எடுக்கின்றனர். மாணவர்களின் சந்தேகத்துக்கு ஆசிரியர்கள் உடனுக்குடன் செல்போன் மூலம் நிவர்த்தி செய்ய வேண்டும். மாணவர்கள் தினமும் இணைய கல்வி மூலம் படிக்கும் ஆய்வறிக்கையை வாரத்துக்கு ஒரு முறை முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்கள் சந்தேகம் குறித்து ஆசிரியர்களிடம் செல்போன் மூலம் கேட்டால், அதை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும். அப்படி தெரிவிக்காத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மாணவர்களின் அழைப்புக்கு ஆசிரியர்கள் யாரேனும் தொலைபேசி, செல்போனை எடுக்காமல் நிராகரித்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது மாணவர்கள் முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரில் அல்லது செல்போன் மூலம் (99620 41021) புகார் தெரிவிக்கலாம்.
ஊரடங்கு காலத்திலும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் நல்ல நிலையில் படித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தக் கணினி வழி கல்வியில் சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.