

தா.பேட்டை:
திருச்சி மாவட்டம் தா. பேட்டை அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது அச்சப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆயுதபூஜை மறுநாள் விஜயதசமி அன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற விழாவில் திரளான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கோவிலில் உள்ள அச்சப்பன், அகோர வீரபத்திரர், மதுரைவீரன், வெடிகார குள்ளன், பாப்பாத்தி, மகாலட்சுமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு விழா முதல் நாளன்று கோவிலில் பக்தர்கள் தீப மேற்றி வழிபட்டனர்.
நேற்று காலை பெண்கள் கோவிலை சுற்றி பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் கோவிலில் இருந்து அச்சப்பன் மற்றும் அகோர வீரபத்திரன் உள்ளிட்ட சுவாமிகளை பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வாண வேடிக்கையுடன் காட்டு கோவிலுக்கு சுமந்து சென்றனர்.
அங்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வரிசையில் அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. அப்போது கோவிலை சேர்ந்த சேர்வைகாரர்கள் (பூசாரிகள்) தப்பு அடித்து நடனம் ஆடினர். அந்த சமயத்தில் காட்டுக் கோவில் திடலில் நீண்ட வரிசையில் தலைவிரி கோலத்துடன் மண்டியிட்டவாறு கைகளை உயர்த்தியபடி அமர்ந்திருந்த பெண்களின் கைகளில் கோவில் பூசாரி சாட்டையால் அடித்தார்.
பின்னர் சாட்டை அடி வாங்கிய பெண்கள் கோவிலுக்குள் சென்று சுவாமியை வழிபட்டு விபூதி பிரசாதம் வாங்கி சென்றனர். அச்சப்பன் கோவிலில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்குவதால் காத்து கருப்பு, பில்லி சூனியம், பேய்பிடித்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதாகவும் பல நூறு ஆண்டுகளாக நம்பப்படுகிறது.
மேலும் திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சுவாமியி டம் வேண்டி கொண்டு சாட்டையால் அடி வாங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று நம்புவதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.