

கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவல் கிராமத்தில் காடுவெளியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள் குலதெய்வமாக காடுவெளியம்மனை வழிபட்டு வருகிறார்கள். இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
காணும் பொங்கலையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கோவிலில் மூலவர் சன்னதியில் இருந்த காடுவெளி அம்மன் சிலையை காணவில்லை. கோவிலில் இருந்த மின் விளக்குகள், கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் உடைக்கப்பட்டு சிதறி கிடந்தன. மர்ம கும்பல் கோவிலில் உள்ள அம்மன் சிலையை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீஸ் டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மன் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே அம்மன் சிலை திருட்டு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அம்மன் சிலையை திருடி சென்ற கொள்ளையர்கள், போலீசிடம் மாட்டி கொள்வோம் என்று பயந்தனர். இதைதொடர்ந்து அவர்கள் கோவில் அருகே இன்று ரோட்டோரத்தில் திருடிய அம்மன் சிலையை வீசி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இன்று காலை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் திருட்டுபோன அம்மன் சிலை ரோட்டோரத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி பந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அம்மன் சிலையை மீட்டனர்.
மேலும் ரோட்டோரத்தில் அம்மன் சிலையை வீசி சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.