

ஐதராபாத்:
கொரோனா பாதித்த மாநிலங்களில் ஒன்று தெலுங்கானா. இங்கு இதுவரை 3 பேரை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
கொரோனா வைரசையொட்டி தெலுங்கானா மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், பயிற்சி மையங்கள், மதுபான விடுதிகள் ஆகியவை வருகிற 31-ந்தேதி வரை மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பெருந்திரளாக கூட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் அனுமதிக்க வேண்டாம் என்றும் முதல் மந்திரி சந்திரசேகரராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினாலோ, பொய்யான தகவல்களை வெளியிட்டாலோ ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று ஐதராபாத் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.