உணவு சமைத்த போது இளம்பெண் உடல் கருகி பலி
கோவை:
கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒத்தகால்மண்டபத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி ஆதிலட்சுமி (வயது 30). இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஆதிலட்சுமி மண்எண்ணை அடுப்பில் உணவு சமைத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அடுப்பு வெடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென ஆதிலட்சுமியின் உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆதிலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 4 வருடத்தில் ஆதிலட்சுமி இறந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

