கேரளாவில் மாணவிகளை ஆபாசமாக படம்பிடித்து ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட ஆசிரியர் கைது

கேரளாவில் மாணவிகளை ஆபாசமாக படம்பிடித்து ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியர் அருண்குமார்
ஆசிரியர் அருண்குமார்
Published on

திருவனந்தபுரம்:

சமூகவலைதளமான ‘பேஸ்புக்’ இன்றைய இளைய தலைமுறையினரின் இணைபிரியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. இதில் இணைந்துள்ளவர்கள் அதன்மூலம் பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

பல்வேறு நல்ல வி‌ஷயங்களுக்கு பயன்படும் இந்த பேஸ் புக்கை சிலர் தவறான காரியங்களுக்கும் பயன்படுத்துவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

கேரள மாணவிகளின் ஆபாச படங்கள், அவர்களது அந்தரங்கங்கள் படம் பிடிக்கப்பட்டு பேஸ் புக்கில் வெளியாகி உள்ளதாக திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசாருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் சென்றன.

இதை தொடர்ந்து சைபர்கிரைம் போலீசார் தங்கள் விசாரணையை ரகசியமாக தொடங்கினார்கள். மாணவிகளின் ஆபாச படங்கள் வெளியானதாக புகார் கூறப்பட்ட பேஸ்புக்கின் முகவரி ஆஷிக் என்பவர் பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது போலி பெயரில் தொடங்கப்பட்ட பேஸ்புக் முகவரி என்பது தெரியவந்தது.

அந்த பேஸ்புக்கின் பின்னணியில் உள்ளவர் பற்றி தொடர்ந்து நடந்த விசாரணையில் அவரது பெயர் அருண்குமார் (வயது 36) என்பதும், ஆசிரியரான இவர் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியில் டியூ‌ஷன் சென்டர் நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் அதிரடியாக அவரது டியூ‌ஷன் சென்டருக்குள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அருண்குமாரின் அறையில் இருந்து 6 செல்போன்களும், ஒரு லேப்-டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள வீடியோக்களை பார்த்தபோது அதில் இருந்தவர்கள் அனைவரும் அவரது டியூ‌ஷன் சென்டரில் படிக்கும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவிகள் என்பது தெரியவந்தது.

மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகளில் ரகசியமாக கேமராக்களை பொருத்தியும், அவர்கள் அமர்ந்து படிக்கும் மேஜைகளின் கீழே சிறிய கேமராக்களை வைத்தும் அவர்களது அந்தரங்கங்களை ஆபாசமாக ஆசிரியர் அருண் குமார் படம் பிடித்து போலி பேஸ்புக் முகவரி தொடங்கி வெளியிட்டுள்ளார். மேலும் செல்போனில் வாட்ஸ்-அப் மூலமும் அவர் இந்த படங்களை பரவவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து ஆசிரியர் அருண்குமார் கைது செய்யப்பட்டார். அவர் இந்த ஆபாச படங்களை காட்டி மாணவிகளை மிரட்டி செக்ஸ் கொடுமை செய்துள்ளாரா? என்பது பற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com