

தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜே.சி.திவாகர் ரெட்டி, விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டதாக இண்டிகோ, ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் அவருக்கு தடை விதித்துள்ளன.
திவாகர் ரெட்டி செல்லவிருந்த விமானம், அவரது வருகை தாமதமானதால் புறப்பட்டுச் சென்றது. அதாவது, விசாகப்பட்டினத்தில் இருந்து 8.10 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானத்தின் மூலம் ரெட்டி ஐதராபாத் செல்லவிருந்தார்.
விமானப் போக்குவரத்து விதிகளின்படி, விமானம் புறப்படுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாகவே பயணிகள் செல்லும் வழி மூடப்படும். அதன்பின்னர் யாரும் அந்தவழியாக அனுமதிக்கப்பட மாட்டனர்.
இந்நிலையில், விமானம் புறப்பட்டுச் சென்ற அரைமணிநேரம் கழித்தே ரெட்டி விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக கூறப்படுகிறது. அரை மணிநேரம் தாமதமாக வந்த ரெட்டிக்கு விமான நிலைய ஊழியர்கள் நுழைவுச் சீட்டு வழங்க மறுத்துவிட்டனர். இதனால் கோபமடைந்த ரெட்டி, விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ விமான நிறுவன அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டாராம். அங்குள்ள பொருட்களை தூக்கி வீசியும் தாக்குதல் நடத்தினாராம்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திவாகர் ரெட்டிக்கு இண்டிகோ விமான நிறுவனம் தடை விதித்துள்ளது. இண்டிகோ விமானத்தை தொடர்ந்து ஏர் இந்தியா விமானமும் அவருக்கு தடை விதித்துள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் அவருக்கு தடை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.