டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.3½ லட்சம் பறித்த வழக்கில் 2 பேர் கைது

டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.3½ லட்சம் பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் ஊட்டத்தூர் பிரிவு ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் மணிவண்ணன். அதே கடையில் தற்காலிக விற்பனையாளரான சுரேஷ் வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ந் தேதி இரவு விற்பனை முடிந்த பின்னர், மது விற்பனை மூலம் அன்று வசூலான தொகை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மணிவண்ணன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் சுரேஷ் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர்களை வழிமறித்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பாடாலூர் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் சம்பவத்தன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த சண்முகவேல்(வயது 23), ராஜதுரை (22) என்பதும், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(27) என்பவருடன் சேர்ந்து, டாஸ்மாக் ஊழியர்களிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் வெவ்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜதுரை, சண்முகவேல் ஆகியோரை பாடாலூர் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே மற்றொரு வழக்கில் செந்தில்குமாரை சென்னை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com