

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற்றது. முதற்கட்டமாக கடந்த 27-ந் தேதி கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், திருப்பனந்தாள், அம்மாபேட்டை, திருவையாறு மற்றும் பூதலூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து 2-வது கட்டமாக கடந்த 30-ம் தேதி தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவோணம், சேதுபாவாசத்திரம், மதுக்கூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில் தஞ்சை ஒன்றியங்களில் முதல் கட்டமாக நடைபெற்ற 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தலில் 75 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அதேபோல் 2-ம் கட்டமாக நடைபெற்ற 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தலில் 78.57 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அந்த ஒன்றியங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பெட்டி உள்ள அறைக்கு சீல்வைக்கப்பட்டது.
தற்போது அந்த வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 24 மணிநேரம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கையை குறிக்கும் முகவர்களுக்காக இரும்பு கம்பி கூண்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்ககூடாது என பல்வேறு கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி முகவர்களுக்கான அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கும் எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாத வண்ணம் பதற்றமான வாக்கு எண்ணும் மையங்கள் எவை என கண்டறியப்பட்டு அவற்றிற்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.