

கோவை சூலூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
ஓட்டுக்கு காசு கொடுக்கும் ஜனநாயகம் கேடுகெட்ட நிலையை எட்டியுள்ளது. எதிர்கட்சியாக இருக்கும்போது வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு ஆளுங்கட்சியானதும் மக்களை மறந்துவிடுவது தான் திராவிட கட்சிகளின் வாடிக்கையாகும்.
ஸ்டாலின் ஆட்சி தவறு என்றால் அதற்கு நாம் தான் காரணம். நான் நமது தேர்தல் அறிக்கையில் தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள் வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்தேன். தற்போது அதே திட்டத்தை தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். தனது அரசியல் எச்சிலில் தான் இன்று பல கட்சிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
அனைத்து கட்சிகளும் தமிழ் பெயர்களை பயன்படுத்தத் தொடங்கி இருப்பதே நாம் தமிழரின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி.
ஸ்டாலின் 2000 ரூபாய் தருகிறேன் என்றால், நடிகர் விஜய் 2500 ரூபாய் தருகிறேன் என்கிறார். இது தி.மு.க.வுக்கும் த.வெ.க-வுக்கும் இடையிலான போட்டி அல்ல. மாறாக 2000-க்கும் 2500-க்கும் இடையே நடக்கும் போட்டி. இதனை பார்க்கும்போது எனக்கு, ஆட்டுக்குடலோடு நடக்கும் போட்டியை நினைவுபடுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கூடியிருந்த தொண்டர்கள் அவரை பாட்டுபாடும் படி கேட்டனர். உடனே அவரும் பாட்டு பாடத்தொடங்கினார்.
“1000 ரூபாயும் தந்தான், அரிசி, பருப்பும் தந்தான்.
இப்ப அண்டா, குண்டா தாரான், கூட 2000 ரூபாயும் தாரான்
வாங்கிட்டு வாடி ஓட்டுப் போட்டுட்டு வரலாம்.
உன் 2000 ரூபாயும் வேணாம்.
விவசாயிக்கு ஓட்டுபோட்டா இது எல்லாம் வரும் தானா”
என ஓட்டுக்கு பணம் வாங்குவதால் ஏற்படும் நிலை குறித்து தனது பாணியில் உணர்ச்சிகரமான தெம்மாங்கு பாடலைப் பாடி தொண்டர்களை சீமான் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.