

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.
சமீபகாலமாக உணவு தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
நேற்று ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதி சாலையில் வாகனங்களை வழிமறித்து கம்பீர நடைபோட்டு நீண்ட தூரம் உலா வந்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகம் வசிக்கின்றன. தற்போது இந்த வழியாக வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து காட்டு யானைகள் சாலையில் உலா வருவதும் கரும்பு லாரிகளை வழிமறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
மேலும் அந்த வழியாக வரும் மற்ற வாகனங்களையும் வழி மறிப்பதும் வாகனங்களில் கரும்பு உள்ளதா என சோதனை செய்வதும் தொடர்கதையாகி வரும் நிலையில் தாளவாடி கும்டாபுரம் வனச்சாலையில் ஒற்றை காட்டு யானை கம்பீர நடைபோட்டு நீண்ட தூரம் சாலையில் உலா வந்தது.
இதனை கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி நீண்ட தூரம் இயக்கினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட தூரம் உலா வந்த யானை சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் செல்ல தொடங்கின.
தொடர்ச்சியாக கும்டாபுரம் வனப்பகுதி சாலையில் கரும்பு லாரிக்காக காத்திருக்கும் ஒற்றை யானையை அடர்ந்த வனப் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.