கேரளத்தில் இருந்து மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை மடக்கிப்பிடித்த வாலிபர்

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதி அருகே இருசக்கர வாகனத்தை லாரியின் முன்பு நிறுத்தினார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்களும் திரண்டனர்.
மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்
மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்
Published on: 
Summary

மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, கழிவுகளை ஏற்றிச்சென்ற அந்த லாரியை மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பந்தப்பட்ட லாரிக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

கேரளத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் கோழிக்கழிவுகள் உள்ளிட்ட இறைச்சி கழிவுகள் கொண்டுவரப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதனைத்தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு, வாகன தணிக்கை உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனைச் சாவடி

மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை வில்லுக்குறியில் இருந்து நாகர்கோவில் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியின் பின்னால் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

லாரி டிரைவர்

அந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதுடன், கோழிக் கழிவுகள் சாலையில் கொட்டிக்கொண்டு செல்வதை கண்டு வாலிபர் அதிர்ச்சியடைந்தார். இதைப்பார்த்த அவர், தனது மோட்டார் சைக்கிளில் லாரியை துரத்திச் சென்றார். தன்னை வாலிபர் பின்தொடர்ந்து துரத்தி வருவதை பார்த்த லாரி டிரைவர் வாலிபருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இருசக்கர வாகனம்

இருப்பினும் அந்த வாலிபர், தனது மோட்டார் சைக்கிளில் விடாமல் லாரியை துரத்திச் செனறார். சுமார் 7 கிலோமீட்டர் தூரம் துரத்தி வந்து நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதி அருகே இருசக்கர வாகனத்தை லாரியின் முன்பு நிறுத்தினார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்களும் திரண்டனர்.

துர்நாற்றம்

லாரியில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசிய நிலையில், அதுகுறித்து டிரைவரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வடசேரி போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

நெல்லை மாவட்டம்

விசாரணையில் கேரள மாநிலம் தலச்சேரி பகுதியில் இருந்து மீன் கழிவுகளை நெல்லை மாவட்டம் கூடங்குளத்திற்கு கொண்டு செல்வதாக டிரைவர் கூறினார். இதையடுத்து போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள்

மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, கழிவுகளை ஏற்றிச்சென்ற அந்த லாரியை மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பந்தப்பட்ட லாரிக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

கேரளதத்தில் இருந்து கழிவுகள் வடிந்த நிலையிலேயே லாரியில் மீன் கழிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டதாலேயே குமரி மாவட்டத்திற்குள் இந்த லாரி வந்துள்ளது. குமரி மாவட்டத்திற்குள் வருவதற்கு முன்பே சோதனை சாவடியில் இந்த வாகனத்தைத் தடுத்திருக்க வேண்டும். போலீசார் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இனிவரும் காலங்களில் போலீசார் சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு இதுபோன்ற லாரிகளை மாவட்டத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com