

நாகர்கோவில் நகர் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ரெயில் மற்றும் பஸ் நிலையங்களிலும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஸ்டீபன்ராஜ் சிக்கவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ்(வயது 36). தற்போது இவர் குமரி மாவட்டம் திக்குறிச்சி அருகே வசித்து வருகிறார். இவர் மீது மார்த்தாண்டம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத்தடுத்து அந்த வழக்கில் ஸ்டீபன்ராஜை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பிறகு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்குள்ள ஒரு வார்டில் ஸ்டீபன்ராஜூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பெற்ற வார்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஸ்டீபன் ராஜ் சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் அவர் இன்று காலை வார்டுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீசார் அவரை கழிவறைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது ஸ்டீபன் ராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் சென்று தேடிப்பார்த்தனர்.
ஆனால் ஸ்டீபன்ராஜ் கிடைக்கவில்லை. அவர் தப்பிச்சென்றது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பிச் சென்றது பற்றி மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நாகர்கோவில் மாநகரம் மற்றும் புறநகர் பகுதி முழுவதும் முடுக்கி விடப்பட்டது.
நாகர்கோவில் நகர் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ரெயில் மற்றும் பஸ் நிலையங்களிலும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஸ்டீபன்ராஜ் சிக்கவில்லை. அவரை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச் சையில் இருந்த கைதி தப்பியோடிய சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.