அலங்கார மின்கம்பம் சரிந்து விழுந்து சிறுவன் பலி

புதுச்சேரி பெரியகடை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அஜாக்கிரதையாக செயல்பட்ட மின்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அலங்கார மின்கம்பம் சரிந்து விழுந்து சிறுவன் பலி
Published on: 
Summary

ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் கடற்கரையில் பாதுகாப்பற்ற துருபிடித்த மின் கம்பம் சரிந்து விழுந்து 5 வயது குழந்தை இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி கடற்கரை அழகை ரசிக்க நாட்டின் பல பகுதியில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

உள்ளூர் மக்களும் காலை, மாலை மற்றும் விடுமுறை நாட்களில் கடற்கரையில் குவிந்து விடுகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் குழந்தைகளுடன் குவியும் கடற்கரையில் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது.

துரு பிடித்த மின் கம்பங்கள்

உடைந்து கிடக்கும் இருக்கைகள், மின் கம்பங்களில் ஆபத்தான முறையில் கேபிள்கள் நீட்டிக் கொண்டு இருப்பதும், துரு பிடித்த மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இது குறித்து பலமுறை சுட்டி காட்டியும், அரசு நடவடிக்கை எடுக்க வில்லை.

இந்த நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தஸ்லீம், ரிகானா தம்பதியினர், வம்பாக்கீரப்பாளையத்தில் தங்கி புதுச்சேரி கடற்கரையில் மின்மினி விளக்குகள், பொம்மைகள் விற்று வருகின்றனர்.

மின்கம்பம் சரிந்து பலி

நேற்று மாலை ரிகானா தனது 5 வயது குழந்தை பைசலுடன், கடற்கரையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். பைசல் தனது தம்பியுடன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான். சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.

அப்போது, துருப்பிடித்த அலங்கார மின் கம்பம் ஒன்று, குழந்தை பைசல் மார்பு மீது திடீரென சரிந்து விழுந்தது. இதில் துடிதுடித்த குழந்தையை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

கடற்கரை சாலை

இதனால் கடற்கரை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையின் நெஞ்சில் மின் கம்பம் விழுந்ததால், ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இதுகுறித்து புதுச்சேரி பெரியகடை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அஜாக்கிரதையாக செயல்பட்ட மின்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மின்துறை அலட்சியம்

ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் கடற்கரையில் பாதுகாப்பற்ற துருபிடித்த மின் கம்பம் சரிந்து விழுந்து 5 வயது குழந்தை இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடற்கரை சாலையில் உள்ள பல மின்கம்பங்கள் துருபிடித்து எந்நேரமும் விழும் நிலையில் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதேபோல் ஒரு துருபிடித்த மின்கம்பம் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com