உலக சதுரங்க நாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது.
CM Vijay -  Praggnanandhaa
Published on

முதலமைச்சர் விஜய்

உலக சதுரங்க நாளான இன்று முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. 1988 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, குகேஷ், பிரக்ஞானந்தா, செல்வி வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இந்நாளில் எனது நல்வாழ்த்துகள்.

உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறி வரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு நமது அரசு அனைத்து வகையிலும் துணை நின்று எல்லா உதவிகளையும் வழங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச சதுரங்க தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று சர்வதேச சதுரங்க தினம் (International Chess Day) கொண்டாடப்படுகிறது. 1924 ஆம் ஆண்டு இதே நாளில் உலக சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்டது. இந்த நாளை சதுரங்க விளையாட்டுக்கான சர்வதேச ஒத்துழைப்பை ஆதரிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை (UN) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு

1924-ம் ஆண்டு ஜூலை 20 பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் 'பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு' (FIDE) தொடங்கப்பட்டது.

'பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில், 1966-ம் ஆண்டு முதல் ஜூலை 20-ஐ சர்வதேச சதுரங்க நாளாகக் கொண்டாட யுனெஸ்கோ (UNESCO) முன்மொழிந்தது.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA) இந்த நாளை அதிகாரப்பூர்வமாக உலக சதுரங்க நாளாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது.

சதுரங்கம்

சதுரங்கம் வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. இது வியூகங்களை வகுத்தல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் மூளையின் உடற்பயிற்சிக் கூடமாகும்.

மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைக்கவும், முடிவெடுக்கும் திறனை வளர்க்கவும் பள்ளிகளில் சதுரங்கத்தை ஒரு கல்விச் கருவியாக மாற்றுவதை இந்நாள் ஊக்குவிக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com