கோவில்பட்டி: ஒரே பெண் 2 பேரை திருமணம் செய்து மோசடி

கார்த்திகா உள்ளிட்ட மூவர் மீது கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Marriage Fraud
Published on: 
Summary

ஒரே பெண்ணை 2 பேருக்கு திருமணம் செய்து வைத்து மோசடி செய்த சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த கார்த்திகா (23) என்ற பெண்ணுக்கும், தஞ்சாவூரை சேர்ந்த சித்தார்த்தன் (36) என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தஞ்சாவூரில் திருமணம் நடந்தது.

இடைத்தரகர்களுக்கு ரூ.3 லட்சம், பெண்ணுக்கு 3 பவுன் நகை வழங்கப்பட்டு, சுமார் ரூ.15 லட்சம் செலவில் திருமணம் பிரமாண்டமாக நடந்துள்ளது.

மாயமான மனைவி

திருமணம் முடிந்த 2-வது நாள் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என கூறி கார்த்திகா கோவில்பட்டி சென்றுவிட்டார். தீபாவளிக்கும் தஞ்சாவூர் செல்லாததால் சந்தேகமடைந்த சித்தார்த்தன் நேற்று கோவில்பட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கார்த்திகா இல்லை.

இரண்டு முறை திருமணம்

அப்போது நாமக்கல்லை சேர்ந்த ரஞ்சித்குமார் (37) அங்கு வந்து, தன் மனைவி கார்த்திகா எங்கே என கேட்டுள்ளார். கடந்த நவம்பர் 1-ம் தேதி தனக்கும் கார்த்திகாவுக்கும் கோவிலில் திருமணம் நடந்ததாக அவர் கூறியதை கேட்டு சித்தார்த்தன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே பெண் இருவரையும் ஏமாற்றியது தெரியவந்தது.

கார்த்திகாவின் பெற்றோர் என கூறிக்கொண்ட முனீஸ்வரி - மாரியப்பனிடம் விசாரித்தபோது, மாரியப்பன் முதலில் தான் புரோக்கர் என்றும், பின்னர் முனீஸ்வரியின் கணவர் என்றும் முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளார். கார்த்திகா முனீஸ்வரியின் அக்காள் மகள் என்றும், தற்போது மலேசியாவில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மோசடி விசாரணை

இதுகுறித்து சித்தார்த்தன், ரஞ்சித்குமார் அளித்த புகாரில் கோவில்பட்டி மேற்கு போலீசார் கார்த்திகா, மாரியப்பன், முனீஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கும்பல் வேறு யாரையும் ஏமாற்றியதா, மதுரையை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்ய முயன்றதா என விசாரணை நடக்கிறது.

இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வக்கீல் சரவணன், போலீசார் புகாரை மாற்றி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், கார்த்திகாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

X