

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போன நிலையில் பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டது. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மூல வைகையாறு, முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மேலும் விவசாய பாசனத்திற்கு நீராதாரமாக உள்ள குளம், கண்மாய், பாசன வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்ப தொடங்கி உள்ளன.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் போதிய அளவு நீர்மட்டம் இல்லாததால் முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர்மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து இன்று காலை 44.03 அடியை எட்டி உள்ளது. 407 கனஅடி நீர் வருகிற நிலையில் குடிநீர் திட்டங்களுக்காக 86 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1305 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் வைகை அணைக்கு வரும் நீர்வரத்து குறித்து மாவட்ட கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள மழைமானியின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.70 அடியாக உள்ளது. 301 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2033 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 27.40 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 112.99 அடியாக உள்ளது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
வீரபாண்டி 0.6, பெரியகுளம் 2, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 1.2, பெரியாறு அணை 2.4, தேக்கடி 0.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.