

தஞ்சாவூர் மாவட்டத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் மீது 31.37 ஏக்கர் நிலம் ஆக்கிரமித்தது தொடர்பாக வழக்கு உள்ளது. இது தொடர்பாக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தொடர்ந்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழகம் சார்பில் "ஆக்கிரமிப்பு இடத்துக்குப் பதில் 5 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு இடத்தை வழங்க தயார்" எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் "ஏற்கனவே வழக்கை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்திருந்த நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறை மீட்க வேண்டும் என உயர்நீதுிமன்றம் கடந்த ஜனவரி 9-ந்தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது" என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், உச்சநீதிமன்றம் "கல்விக்காக ஒரு பல்கலைக்கழகம் செயல்படும்போது வேறு நிலத்தை பெற்றால் என்ன? ஆக்கிரமிப்பு நிலத்துக்கு பதில் வேறு நிலத்தை ஏன் பெறக்கூடாது?" என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அத்துடன், வேறு இடத்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக அரசு தனது நிலைப்பாட்டை மனுவாக தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.