

மேட்டூர் அணை, சேலம் உள்ளிட்ட பல மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும், பாசன வசதிகளையும் பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. மேலும், ஒகேனக்கல் வழியாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், பென்னாகரம் அருகே ஒட்டனூர் பகுதியில் தேங்கி நிற்கும் மேட்டூர் அணை நீர் பச்சை நிறத்தில் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். தண்ணீரின் நிறம் மாறியதுடன், துர்நாற்றம் வீசுவதாகவும், கால்நடைகள் கூட அந்த நீரை குடிக்கத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த நீரில் குளிப்பவர்களுக்கு தோல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏரியூர், நாகமரை, ஒட்டனூர் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பையே பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்கும், கால்நடைகளின் பயன்பாட்டிற்கும் இந்த நீரையே நம்பியுள்ள நிலையில், நீரின் தரம் குறைந்திருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காவிரி ஆற்றில் கர்நாடக பகுதியில் இருந்து கழிவுநீர் மற்றும் ரசாயனக் கழிவுகள் கலப்பதே தண்ணீர் பச்சை நிறமாக மாறுவதற்கு காரணமாக இருக்கலாம். அரசு உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, நீர் மாசுபாட்டை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலை குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து ஆய்வு நடத்தி, தண்ணீரின் தரத்தை பரிசோதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.