

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே மேனாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர் மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய்யை குறித்து விமர்சித்து பேசி இருந்தார்.
கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியதாவது, விஜய் போன்ற ஒருவரை இதற்கு முன்பு தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே பெற்றது கிடையாது. இனி வரும் தேர்தல்களில் 5 சதவீத வாக்குகள் கூட பெற முடியாமல் விஜய் மற்றும் அவருடைய கட்சி தோற்று போகும்.
சட்டமன்றத்தை கூட்டும் போது உங்கள் எலும்பு இருக்காது, உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம். சட்டமன்றத்தை கூட்டிப் பாருங்கள். யார் ஓடியது? என்பது தெரியும்.
கரூரில் கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கேரவனில் யாரை வைத்துக் கொண்டு ஓடுனீர்கள். பேய் அடிச்சது போல சட்டமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்களே.
கொத்து பரோட்டா போட போறாராம். உங்களை போல ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்க பார்த்திருக்கிறோம். இன்றைக்கு தமிழகத்தில் அந்த அன்பு மகளை போன்று, 3 வயது குழந்தை முதல் 95 வயது பாட்டி வரை யாரும் சுதந்திரமாக நடக்க முடியவில்லை. இன்று தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்று பேசினார்.
முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் மீது தூத்துக்குடி போலீசார் கொலை மிரட்டல், அவமதிப்பு பேச்சு, தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.