

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது தூத்துக்குடி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியபோது, சட்டமன்றத்தை கூட்டும்போது உனக்கு (முதலமைச்சர் விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம் சட்டமன்றத்தை கூட்டிப்பார் என்று பேசி இருந்தார்.
முதலமைச்சர் விஜய்யை குறித்து விமர்சித்தும், சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.
மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் போலீஸ் வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அவர் மீது தூத்துக்குடி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
கொலை மிரட்டல், அவமதிப்பு பேச்சு, தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மார்க்கண்டேயன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.