

தனித்துவ அடையாள எண் முறை மூலம் ஒரு மருத்துவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மாநில பதிவேட்டிலும், தேசிய பதிவேட்டிலும் உடனே அறிந்துகொள்ள முடியும்.
மருத்துவர்கள் பதிவு மற்றும் மருத்துவ உரிம திருத்த விதிமுறைகள் 2026 வரைவு விதிகளில் தேசிய மருத்துவ ஆணையம் மாற்றங்கள் செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாநில மருத்துவ கவுன்சிலில் மருத்துவர் பதிவு செய்தவுடன், தேசிய மருத்துவ ஆணையத்தின் நெறிசார் வாரியம் மூலமாக அவருக்கு தனித்துவமான அடையாள எண் உருவாக்கப்படும்.
இந்த எண் வழங்கப்பட்ட பிறகு, அந்த மருத்துவர் நாட்டின் எந்த மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ தனியாக மீண்டும் பதிவு செய்ய தேவையில்லாமல் இந்தியா முழுவதும் மருத்துவ பயிற்சி மேற்கொள்ள தகுதி பெறுவார். மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் குறியீடு, மாநில மருத்துவ கவுன்சில் பதிவு எண் ஆகியவை உள்ளடங்கியிருக்கும் வகையிலான தனித்துவ அடையாள எண்ணாக இது இருக்கும்.
தனித்துவ அடையாள எண் முறை மூலம் ஒரு மருத்துவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மாநில பதிவேட்டிலும், தேசிய பதிவேட்டிலும் உடனே அறிந்துகொள்ள முடியும். ஏற்கெனவே மாநில மருத்துவ கவுன்சில்களில் பதிவு செய்துள்ள மருத்துவர்கள், தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விவரங்களை புதுப்பித்து தனித்துவ அடையாள எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதற்காக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் தங்களின் கருத்துகளையும், ஆட்சேபனைகளையும் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.