

சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.