

உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 2 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும், படுகாயம் அடைந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை 4.45 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், சிறுத்தனூர் கிராமம் அருகே ஐந்து மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த ஆம்னி வேன் மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில் ஜெஸ்டின் (வயது 16) த/பெ கிருஷ்ணராஜ், புருனோ (வயது 17) த/பெ லூர்துசாமி ஆகிய இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.
இவ்விபத்தில், படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆலன் (வயது 15) த/பெ லூர்துசாமி. சுஜீத் (வயது 16) த/பெ அய்யப்பன் மற்றும் அஜய் (வயது 16) தா/பெ ஜாக்லின் ஆகிய மூன்று மாணவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.