'நான் கூட இதுக்கு தான் நினைச்சேன்...'-கைது குறித்து உதயநிதி கிண்டல் பேச்சு!

"அரசே சொந்தச் செலவில் எனக்கு ஒரு ரோடு ஷோ ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றது போல் இருந்தது" என்று நகைச்சுவையாகக் கூறினார்.
Udhayanidhi
Published on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டத்துறை கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமது சமீபத்திய கைது மற்றும் சிறைவாசம் குறித்து நகைச்சுவையாகப் பேசி அரங்கத்தில் இருந்தவர்களைச் சிரிப்பலையில் மூழ்கடித்தார்.

கூட்டத்தில் பேசிய அவர், தம்மை கைது செய்து அழைத்துச் சென்ற விதம் குறித்துக் குறிப்பிடுகையில், "அரசே சொந்தச் செலவில் எனக்கு ஒரு ரோடு ஷோ ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றது போல் இருந்தது" என்று நகைச்சுவையாகக் கூறினார். மேலும், இந்த வழக்குகளையும் கைது நடவடிக்கைகளையும் சட்டரீதியாக எதிர்கொண்டு தம்மை வெளியில் கொண்டுவந்த திமுக சட்டத்துறை வழக்குரைஞர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அரசியல் ரீதியாகத் தம் மீது போடப்படும் வழக்குகள் குறித்தும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றிய அவர், ஆளுங்கட்சியின் அடக்குமுறைகளுக்கு திமுக அஞ்சாது என்றும், சட்டத்துறையின் துணை கொண்டு அனைத்துப் பொய் வழக்குகளையும் நீதிமன்றத்தில் முறியடிப்போம் என்றும் உறுதியளித்தார். உதயநிதி ஸ்டாலின் தனது வழக்கமான பாணியில் கிண்டலாகவும் சுவாரஸ்யமாகவும் பேசிய இந்த உரை, இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

வழக்கின் பின்னணி

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் பிரச்சனை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பேசிய உரையின் அடிப்படையில், திமுக மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

சர்ச்சைக்குரிய பேச்சு

தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது பெண் குறித்தும், தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த சில கருத்துகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்ததாகக் கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் தஞ்சாவூர் கிழக்குக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவரைக் கைது செய்தனர். பின்னர் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், விசாரணைக்குப் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நான் கூட இதுக்காக தான் நினைச்சேன்”

தமது கைது நடவடிக்கை தொடர்பாகப் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், அரசு தன் மீது தேவையின்றி வழக்குகளைத் தொடுத்து திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதாகச் சாடினார்.

Udhayanidhi

தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தபோது தனது உதவியாளர் வந்து கைது குறித்துத் தெரிவித்த சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், "நான் கூட இதுக்காகத்தான் என்னைக் கைது செய்கிறார்கள் என்று நினைத்தேன்" எனக் நையாண்டியாகப் பேசினார். காவிரி மற்றும் மேகேதாது விவகாரங்களில் விவசாயிகள் சந்திக்கும் முக்கியச் சிக்கல்களை மூடிமறைக்கவே இத்தகைய கைது நாடகங்கள் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அரசியல் கட்சிகளின் எதிர்வினை

உதயநிதி ஸ்டாலினின் பேச்சைத் ஆளும்கட்சி மற்றும் எதிர்த்தரப்பு அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளை எந்தக் காலத்திலும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்கு சோடிக்கப்பட்டுள்ளதாக திமுக ஆதரவாளர்களும் நிர்வாகிகளும் பதிலளித்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com