

தி.மு.க. இளைஞர் அணி இன்று 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைப் பிரிவுகளில் ஒன்றான தி.மு.க. இளைஞர் அணி இன்று தனது 47-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் தி.மு.க. இளைஞர் அணி இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..! என கூறியுள்ளார்.
மேலும் தி.மு.க. இளைஞர் அணி தொடங்கியது தொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
1980 ஜூலை 20 அன்று மதுரையில் நடைபெற்ற விழாவில், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ துணை அமைப்பாக 'இளைஞர் அணி' முறைப்படி அறிவிக்கப்பட்டது. இதன் முதல் மாநில அமைப்பாளராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார். சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக (1980 முதல் 2017 வரை) அவர் இந்த அணியை வழிநடத்தி, கட்சியின் மிக வலுவான அடித்தளமாக மாற்றினார்.
தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், 2019 ஜூலை 4 முதல் தி.மு.க. இளைஞர் அணியின் மாநில செயலாளராகப் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். இவரின் தலைமையின் கீழ் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை, நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் பல்வேறு சமூகப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
கழகக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, இல்லந்தோறும் இளைஞர் அணிகளை உருவாக்குவது மற்றும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்துவது போன்ற பணிகளை இவ்வணி முன்னெடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.