

தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். அது மட்டுமல்லாமல் த.வெ.க. அமைச்சர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.
நடிகைக்கு எதிராக இரட்டை அர்த்தத்தில் பேசிய நிலையில், தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இதன் அடிப்படையில் இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டார்.
உதயநிதி கைதை எதிர்த்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் கடைகளை மூடவும், சாலையில் செல்லும் வாகனத்தை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை தாக்கி, வாகனத்தை கீழே தள்ளி திமுக-வினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியானது.
இந்த நிலையில், அது தொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அமைச்சர் ராஜ்மோகன், அதில் பதிவிட்டிருப்பதாவது:-
மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுக-வினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது.
அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுக-வினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது. இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்.. சட்டம் தன் கடமையை செய்யும்.
இவ்வாறு ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.