

வரலாற்று சின்னமாக மட்டும் இதனை பார்க்காமல், நீர் மேலாண்மை, தொல்லியல், கட்டிடக்கலை மற்றும் பண்டைய பொறியியல் குறித்து அறிய விரும்பும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான திறந்தவெளி பாடமாக திருவெள்ளறை ஸ்வஸ்திக் கிணறு திகழ்கிறது.
திருச்சி என்றாலே சோழர்களின் வரலாறும், உறையூரும், கரிகால சோழன் கட்டிய கல்லணையும் நினைவுக்கு வரும். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றின் நீரை முறையாக பயன்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட கல்லணை, தமிழர்களின் தொன்மையான நீர்மேலாண்மை அறிவுக்கு உலக அளவில் குறிப்பிடத்தக்க சான்றாக விளங்குகிறது.
ஆனால், திருச்சியின் நீர்மேலாண்மை வரலாறு சோழர்களுடன் மட்டும் முடிவடையவில்லை. சோழர்களுக்கு பின்னர் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய பல்லவர்களின் காலத்திலும், மக்களின் அன்றாட தேவையை கருத்தில் கொண்டு சிறப்பான நீர்நிலைகள், கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதற்கு மிக சிறந்த உதாரணம்தான் திருச்சி மாவட்டம் திருவெள்ளறையில் அமைந்துள்ள மாற்பிடுகு பெருங்கிணறு. பொதுவாக ஸ்வஸ்திக் கிணறு என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கிணறு, புகழ்பெற்ற திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த கிணறு, பல்லவ மன்னர் தந்திவர்மன் ஆட்சிக்காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது. கி.பி. 8ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிணறு உருவாக்கப்பட்டதாக வரலாற்று மற்றும் கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கிணற்றின் மிகப்பெரிய சிறப்பு அதன் கட்டுமான வடிவமைப்பே. மேலிருந்து பார்க்கும்போது, கிணற்றை சுற்றி அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் ஸ்வஸ்திக் வடிவத்தை நினைவூட்டும் வகையில் 4 திசைகளிலும் அமைந்துள்ளன. ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் படிக்கட்டுகள் கீழ்நோக்கி சென்று கிணற்றின் நீர்ப்பகுதியை அடையும் வகையில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது, நீரை சேமிப்பது மட்டுமல்லாமல், அந்த நீரை பொதுமக்கள் எளிதாக அணுகி பயன்படுத்தும் வகையிலும் அக்காலத்திலேயே திட்டமிட்டு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வெட்டு தகவல்களின் அடிப்படையில், ஆலம்பாக்கத்தை சேர்ந்த கம்பன் அரையன் என்பவர் பல்லவ மன்னர் தந்திவர்மன் காலத்தில் இந்த பெருங்கிணற்றை அமைத்ததாக கூறப்படுகிறது.
நான்கு புறங்களிலும் படிக்கட்டுகள் அமைந்துள்ள தனித்துவமான வடிவமைப்பு காரணமாக, பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கிணற்றை அணுகி நீரை பயன்படுத்த முடிந்திருக்கிறது. இதனால் இந்த கிணறு உள்ளூர் மக்களிடையே ‘மாமியார்– மருமகள் கிணறு’ என்ற பெயராலும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்றைய காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நீர் பாதுகாப்பு, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல் போன்றவற்றுக்கு பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு நவீன எந்திரங்களோ, தற்போதைய தொழில்நுட்ப வசதிகளோ இல்லாதகாலத்திலேயே, நில அமைப்பு, நீரின் பயன்பாடு மற்றும் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இவ்வளவு நேர்த்தியான நீர்க்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் திருவெள்ளறை ஸ்வஸ்திக் கிணறு ஒரு சாதாரண பழமையான கிணறு அல்ல. இது பல்லவர் கால கட்டிடக்கலை, பொறியியல் அறிவு, நீர் மேலாண்மை மற்றும் சமூக பயன்பாட்டை ஒருங்கிணைத்த ஒரு வரலாற்று சின்னம். சோழர்களின் கல்லணை காவிரி நீரை பயன்படுத்திய மிகப்
பெரிய நீர்ப்பாசன பொறியியல் சாதனையை எடுத்துக்காட்டினால், திருவெள்ளறையின் ஸ்வஸ்திக் கிணறு அன்றைய காலத்தில் உள்ளூர் அளவில் மக்களின் அன்றாட நீர்த்தேவையை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட நுட்பமான நீர்மேலாண்மை முறையை எடுத்துக்காட்டுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக காலத்தை கடந்து இன்றும் நிலைத்து நிற்கும் இந்த கிணறு, நமது முன்னோர்கள் நீரின் மதிப்பையும், அதை பாதுகாப்பதன் அவசியத்தையும் எவ்வளவு ஆழமாக புரிந்திருந்தனர் என்பதற்கு ஒரு நேரடி சான்றாக உள்ளது. வரலாற்று சின்னமாக மட்டும் இதனை பார்க்காமல், நீர் மேலாண்மை, தொல்லியல், கட்டிடக்கலை மற்றும் பண்டைய பொறியியல் குறித்து அறிய விரும்பும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான திறந்தவெளி பாடமாக திருவெள்ளறை ஸ்வஸ்திக் கிணறு திகழ்கிறது.
காலம் மாறலாம்... தொழில்நுட்பம் மாறலாம்... ஆனால் நீரின் அவசியம் மாறாது. அதை 1,200 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து, அறிவியல் நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ஸ்வஸ்திக் கிணறு, இன்றைய தலைமுறைக்கும் ஒரு முக்கியமான நீர்ப்பாதுகாப்பு பாடத்தை சொல்லி கொண்டிருக்கிறது.