

மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மரங்கள் அல்லது மரக்கிளைகள் சாலையில் விழும் வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த சில நாட்களாக காலநிலையில் மாற்றம் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதுடன், பலத்த காற்றும் வீசி வருகிறது.
குறிப்பாக மக்கள் நடமாட்டமும் வாகன போக்குவரத்தும் அதிகமாக காணப்படும் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் மழை மற்றும் காற்றின் தாக்கத்தால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் சிரமம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட துறை பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மின்கம்பங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலைகளில் ஏற்பட்ட தடைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு, வாகன போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிரின் தாக்கமும் அதிகரித்துள்ளது. காலை நேரம் முதல் மேகமூட்டமான வானிலை காணப்படுவதுடன், அவ்வப்போது மழையும் காற்றும் நீடித்து வருவதால் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மழையுடன் பலத்த காற்று வீசும் நேரங்களில் சாலையோர மரங்களின் கீழ் நிற்பதையும், சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளுக்கு அருகில் செல்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.
மேலும் மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மரங்கள் அல்லது மரக்கிளைகள் சாலையில் விழும் வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழையால் கரன்சி சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. இதேபோல் குன்னூர் லெவல்கிராஸ் அருகே மலைப்பாதையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டதால் உடனடியாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மரம் மற்றும் சாலையில் விழுந்துள்ள மண் குவியல்களை அகற்றினர். இன்று காலை 8 மணி நிலவரப்படி குன்னூர் பகுதியில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- எடப்பள்ளி 121, கொலக்கம்பை 60, குன்னூர் 22, குன்னூர் புறநகர் 20, கேத்தி 18.