

சுற்றுலா இடங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ்வாக், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பையின் பாரஸ்ட், ேமாயர் பாயிண்ட், அப்சர்வேட்டரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக சீசன் காலங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. தற்போது தரைப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளது. மேலும் பள்ளிகளுக்கு இன்றுவரை காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியையொட்டி வாரவிடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அங்கு தற்போது அவ்வப்போது சாரல்மழை பெய்து இதமான சீதோசன நிலை நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ்வாக், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பையின் பாரஸ்ட், ேமாயர் பாயிண்ட், அப்சர்வேட்டரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரியும், நடைபயிற்சியும் செய்து மகிழ்ந்தனர்.
தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான வாகனங்கள் வந்ததால் மலைச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மேல்மலை கிராமங்களான பூம்பாறை-மன்னவனூர் சாலை, அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
3 நாட்களுமே வாகனங்கள் எறும்புபோல் ஊர்ந்து செல்வதை பார்க்க முடிந்தது. நாளை காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் இன்று மதியத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் இருந்து கிளம்ப தொடங்கினர். முக்கிய மலைச்சாலைகளான வத்தலக்குண்டுசாலை, கொடைக்கானல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சீசன் காலங்களில் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெருக்கடி தொடர்கதையாகி வருகிறது. இதற்கு மலைச்சாலையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பே காரணம் என குற்றம் சாட்டுகின்றனர். எனவே பாரபட்சம்மின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க வேண்டும். மாற்று மலைச்சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதையும் விரைவுபடுத்தி கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு காணவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.