

தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல் படுத்தப்படும் என அறிவித்து இருந்தது. அதன்படி வருகிற 28-ந்தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொடங்கி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் உசிலம்பட்டியில் தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்க விழா நடத்துவதற்கான 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதனை மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.
அதன்படி தொடக்க விழாவுக்காக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படும் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மைதானம் ஆகிய 2 இடங்களில் போலீசார் மற்றும் அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அப்போது விழாவில் எத்தனை நபர்களை அனுமதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் நிறுத்தும் இடம், வாகனங்கள் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை வருகிற 28-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய், தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த திட்டத்தில் பயனாளர்களுக்கு வழங்கப்படவுள்ள, 1,106 தாய்மாமன் தங்க மோதிரங்கள் முதற்கட்டமாக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. விஜய், இணை இயக்குநர் ராமசந்திரன் மற்றும் மருத்துவ குழுவினர் முன்னிலையில் கொண்டுவரப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், தாய்மாமன் தங்கம் மோதிர திட்டத்திற்காக நமது தொகுதியை தேர்ந்தெடுத்தற்காக சந்தோசமாக இருக்கிறோம். அவரது வருகைக்காக மக்களும், நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம். முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தேர்தல் வாக்குறுதியான முதல் திட்டத்தை உசிலம்பட்டி மக்கள் முன்னேற்றத்திற்காக இருக்கும் என்பதற்காக எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
எப்பொழுதுமே உசிலம்பட்டியை பின்தங்கிய தொகுதி என ஒதுக்கி விடுவார்கள். ஆனால் முதல்வர், வார்த்தையில் கூட அது இருக்க கூடாது என்பதற்காக சட்டசபையில் பேசியதை வைத்தும் மக்களின் நடவடிக்கையிலும் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக உசிலம்பட்டியை தேர்வு செய்ததற்கு மக்களுக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உசிலம்பட்டி எப்போதுமே பெண்களுக்கு சீர் கொடுக்கும் கலாசாரம் அதிகம் உள்ள பகுதியாகும். பெண் வீட்டார் கடன் வாங்கியாவது சீர் செய்ய நினைக்கிறார்கள். அதனால் இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அங்கு தொடங்குவதே சிறந்தது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பெண் சிசுக்கொலை அதிகம் நடந்த பகுதியாக உசிலம்பட்டி இருந்தது. இது முழுக்க பெண்களை மையப்படுத்திய திட்டம் என்பதால், அங்கு வைத்து இத்திட்டம் தொடங்கப்படுவதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என த.வெ.க. தலைமை ஏற்பாடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.