தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: தொடக்க விழா உசிலம்பட்டியில் இல்லை எனத் தகவல்

1,106 தாய்மாமன் தங்க மோதிரங்கள் முதற்கட்டமாக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
Published on

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு ரூ.755.83 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நடைபெறுவதாக இருந்த விழா, தற்போது மதுரைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த இடமாற்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

முன்னதாக,

உசிலம்பட்டியில் தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்க விழா நடத்துவதற்கான 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதனை மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதன்படி தொடக்க விழாவுக்காக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படும் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மைதானம் ஆகிய 2 இடங்களில் போலீசார் மற்றும் அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

அப்போது விழாவில் எத்தனை நபர்களை அனுமதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் நிறுத்தும் இடம், வாகனங்கள் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை வருகிற 28-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய், தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த திட்டத்தில் பயனாளர்களுக்கு வழங்கப்படவுள்ள, 1,106 தாய்மாமன் தங்க மோதிரங்கள் முதற்கட்டமாக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. விஜய், இணை இயக்குநர் ராமசந்திரன் மற்றும் மருத்துவ குழுவினர் முன்னிலையில் கொண்டுவரப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com