

சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலில் ஈடுபட்டனர்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. கட்சிகளுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
நேற்று மறைமுக தேர்தல் நடைபெற்றபோது கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து தி.மு.க.வினர் போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கினார்கள். பல இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளை தட்டி பறித்து வெற்றி பெற்றனர். இது தி.மு.க. கூட்டணியில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷணன் ஆகியோர் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் தி.மு.க. போட்டி வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அதில் அவர், கட்டுப்பாட்டை காற்றில் பறக்கவிட்டு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். அதன் பிறகு என்னை சந்தியுங்கள் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கி வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் பதவியில் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பறித்து வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் பாண்டியன் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
ஆனால் பெரும்பாலான இடங்களில் போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கி வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய இதில் தயக்கம் காட்டினார்கள்.
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் நகராட்சியில் தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகளுக்கு விட்டு கொடுக்க தி.மு.க.வினர் மறுத்தனர். தி.மு.க. சார்பில் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் போட்டி வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றார்.
அதுபோல பண்ருட்டி நகரசபை தேர்தலில் போட்டி வேட்பாளராக தி.மு.க.வை சேர்ந்த ராஜேந்திரன் களம் இறங்கி வெற்றி பெற்றார். மங்கலம்பேட்டை பேரூ ராட்சி தலைவர் பதவியையும் காங்கிரசிடம் இருந்து தட்டி பறித்து தி.மு.க.வின் சம்சாத் பேகம் வெற்றி பெற்றார். இவர்கள் மூவரும் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் அதிகாரப்பூர்வ தி.மு.க. வேட்பாளர் செல்வியை போட்டி தி.மு.க. வேட்பாளர் சகுந்தலா தோற்கடித்து வெற்றி பெற்றார். சகுந்தலா பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டார். அவர் சுயேட்சையாக மனுதாக்கல் செய்து வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் துணைத் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தி.மு.க.வை சேர்ந்த குணசேகரன் வெற்றி பெற்றார். அவரும் பதவியை ராஜினாமா செய்ய தயக்கம் காட்டி உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி தலைவர் பதவியை காங்கிரசுக்கு தி.மு.க. விட்டுக் கொடுத்தது. ஆனால் நேற்று நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் சூர்யபிரகாஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பதாக தெரிய வந்துள்ளது.
இதேபோன்று திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் பதவி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க.வின் குமார் போட்டி வேட்பாளராக களம் இறங்கி தலைவர் பதவியை கைப்பற்றினார். அவரும் பதவியை ராஜினமா செய்ய தயக்கம் காட்டி வருகிறார்.
தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தி.மு.க. போட்டி வேட்பாளராக ரேணுபிரியா போட்டியிட்டு வெற்றி பெற்றார். போடி நகரசபை துணைத் தலைவர் பதவி கம்யூனிஸ்டுக்கும், பெரியகுளம் நகரசபை துணைத்தலைவர் பதவி விடுதலை சிறுத்தைக்கும் கொடுக்கப்பட்டது.
அந்த இடங்களிலும் தி.மு.க. போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கி துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றினார்கள். அவர்களும் இன்று மதியம் வரை பதவியை ராஜினாமா செய்ய விரும்பாமல் தயங்கிய படி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்டுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவியும் இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.
இந்த இரண்டு இடங்களையும் தி.மு.க.வினர் விட்டுக் கொடுக்காமல் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களும் இதுவரை ராஜினாமா செய்யாமல் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேரூராட்சி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தி.மு.க.வை சேர்ந்த சித்ரா போட்டி வேட்பாளராக களம் இறங்கி அந்த பதவியை கைப்பற்றிக் கொண்டார்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் பதவி ம.தி.மு.க.வுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தி.மு.க.வின் சேர்மதுரை திடீரென போட்டி வேட்பாளராக மாறி தலைவர் பதவியை கைப்பற்றிக் கொண்டார்.
இன்று காலை அவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. கோவை மாவட்டம் கருமத்தப்பட்டி நகராட்சி தலைவர் பதவியையும் காங்கிரசுக்கு கொடுக்காமல் தி.மு.க.வை சேர்ந்த நித்யா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுபோல பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அங்கு தி.மு.க.வை சேர்ந்த விஸ்வபிரகாஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை ராஜினாமா செய்ய சொல்லி தி.மு.க. பிரமுகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதுபற்றி விஸ்வபிரகாஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீர் திருப்பமாக தி.மு.க.வை சேர்ந்த சாந்தி புஷ்பராஜ் போட்டி வேட்பாளராக களம் இறங்கி தலைவர் பதவியை பிடித்தார்.
அவர் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ளார். இதனால் தர்மபுரி மாவட்ட தி.மு.க.வினரும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கி வெற்றி பெற்ற தி.மு.க.வினரில் பலர் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முயற்சி செய்தனர்.
ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு துரோகம் செய்ததாக கூறி அவர்களை சந்திக்க மு.க.ஸ்டாலின் மறுத்து விட்டதாக தெரியவந்துள்ளது.