

கோவை:
கோவை பெரியக்கடை வீதி, ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி ஆகிய பகுதிகளில் ஏராளமான தங்க நகை கடைகள் மற்றும் தங்க நகை பட்டறைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் ஒரு சில தங்க நகை கடைகளில் 916 ஹால்மார்க் தரம் பதித்து தரம் குறைந்த தங்க நகைகளை சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து விற்பனை செய்வதாக இந்திய தர நிர்ணய அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதனையடுத்து தர நிர்ணய தலைமை அதிகாரி மீனாட்சி தலைமையிலான அதிகாரிகள் நேற்று இரவு ராஜ வீதியில் செயல்பட்டு வந்த தங்க நகை பட்டறையில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் இந்திய தர நிர்ணய ஆணையத்திடம் உரிய லைசென்சு பெறாமல் போலியாக தரம் குறைந்த நகைகளுக்கு 916 ஹால்மார்க் தரம் பதித்து பல்வேறு நகைக்கடைகளுக்கு விற்பனைக்கு கொடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு இருந்த போலி 916 ஹால்மார்க் தரம் பதித்த தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு பணியாற்றி ஊழியர்கள் பெயர், முகவரி ஆகியவற்றை பெற்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல அதிகாரிகள் ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வந்த தங்க நகை பட்டறையில் சோதனை நடத்தினர். அங்கு 916 ஹால்மார்க் முத்திரை பதிப்பதற்கு உரிய லைசென்சு பெறாமல் லேசர் எந்திரம் மூலமாக தரம் குறைந்த தங்க நகைகளுக்கு 916 ஹால்மார்க் தரம் பதித்து பல்வேறு நகை கடைகளுக்கு விற்பனைக்கு கொடுத்தது தெரிய வந்தது. இந்த சோதனையில் தர நிர்ணய அதிகாரிகள் அங்கு இருந்தும் தரம் குறைந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். தங்க நகை பட்டறை உரிமையாளர் பெயர் முகவரி, பணி புரிந்து வந்த ஊழியர்களின் பெயர், முகவரி ஆகியவற்றை பெற்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று ஒரே நாளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரூ.11 லட்சம் மதிப்பிலான தரம் குறைந்த தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து இந்திய தர நிர்ணய தலைமை அதிகாரி மீனாட்சி கூறியதாவது:-
விழா காலங்களில் நகைகடைகளில் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து தரம் குறைந்த நகைகளை விற்பனை செய்வதாக ஏராளமான புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் அதிரடி சோதனை நடத்தி ரூ.11 லட்சம் மதிப்பிலான தரம் குறைந்த தங்க நகைகளை பறிமுதல் செய்து உள்ளோம். எனவே பொதுமக்கள் நகைகள் வாங்கும்போது உஷாராக இருக்க வேண்டும்.
ஒரிஜினல் 916 ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகை தானா என்பதை தெரிந்து கொள்ள இந்திய தர நிர்ணய ஆணையத்தால் பி.ஐ.எஸ்.கேர் என்ற செயலி உள்ளது. தங்க நகை வாங்க செல்லும் பொதுமக்கள் நகைகளை வாங்க செல்லும்போது இந்த செயலியை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். தங்க நகையை வாங்கும்போது அதில் 916 ஹால்மார்க் முத்திரையின் அருகில் ஒருசில எண் இருக்கும் அந்த எண்ணை செயலில் பதிவு செய்தால் கடையின் பெயர், உரிய உரிமம் பெற்று உள்ளாரா? என்ற தகவல்கள் வரும். அவ்வாறு சரியான தகவல்கள் வரவில்லை என்றால் பொதுமக்கள் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.