சாதி மோதலை தடுப்பதற்கு நீதி போதனை வகுப்புகளை நடத்தி மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்- எடப்பாடி

சாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்.
சாதி மோதலை தடுப்பதற்கு நீதி போதனை வகுப்புகளை நடத்தி மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்- எடப்பாடி
Published on

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவன் சின்னத்துரையை, அதே ஊரைச் சேர்ந்த சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்து வந்ததாகவும், அது குறித்து அம்மாணவன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் வீட்டில் இருந்த மாணவன் சின்னத்துரையை சக மாணவர்களில் சிலர் கொடூர ஆயுதங்களால் தாக்கி உள்ளதாகவும், தனது சகோதரன் சின்னத்துரையை காப்பாற்ற வந்த அவரது சகோதரியையும் அம்மாணவர்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்த 2 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இன்றைக்கு, தமிழகமெங்கும் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களினால் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட இளைய சமுதாயம் சீரழிவை சந்திப்பது தினசரி நிகழ்வாக உள்ளது. இளைய சமுதாயத்தினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இரும்புக் கரம் கொண்டு தடுக்க பலமுறை தி.மு.க. அரசை வலியுறுத்தியும், உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

அ.தி.மு.க. அம்மாவின் ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியிலும், சாதி, இன மோதல்கள் இன்றி, மக்கள் சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. சமூக விரோதிகள் ஒடுக்கப்பட்டனர். சாதி, இன மோதல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. தமிழக மக்கள் அமைதியாக தங்களது பணிகளை செய்து வந்தனர்.

ஆனால், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 27 மாத காலத்தில், நாள்தோறும் ஏதேனும் ஒரு குற்றச் சம்பவம் நடைபெறுவதும்; பிறகு, தி.மு.க. அரசு நடவடிக்கை எடுப்பதும், அறிக்கை விடுவதுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. வரும் முன் காப்போம் என்ற எண்ணமே இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றால் என்ன என்று கேட்கும் இந்த விடியா அரசு இனியாவது, மாணவர்களின் மத்தியில் நன்னெறி,

நீதி போதனை வகுப்புகளை நடத்தி மாணவ சமுதாயம் சகோதரத்துவத்துடன் நடப்பதற்கு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்.

சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்ய வேண்டும். சாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும். அதன்மூலம் சாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியினை கண்டு பிடித்து, முளையிலேயே அகற்றிட வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com