

உலகளாவிய வானிலை மாற்றங்களை தீர்மானிப்பதில் பசிபிக் பெருங்கடலில் தோன்றும் எல் நினோ மிக முக்கிய பங்குவகிக்கிறது. மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும். இந்த காலமுறை வெப்பமயமாதல், உலக நாடுகளின் பருவமழைப் பொழிவை தலைகீழாக மாற்றும் வல்லமை கொண்டது.
தற்போது உருவாகி வரும் எல் நினோ நிகழ்வு குறித்து இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் தனது முதல் சிறப்பு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கை இந்திய வானிலை மற்றும் கடல்சார் சூழலில் அடுத்த சில மாதங்களில் ஏற்படப்போகும் முக்கிய மாற்றங்களை விவரிக்கிறது.
அதன்படி, பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் எல் நினோ நிகழ்வு, வரும் நவம்பர் 2026 மற்றும் ஜனவரி 2027 இடைப்பட்ட காலத்தில் அதன் உச்ச நிலையை எட்டும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டம் தமிழகத்தின் முக்கிய மழைக்காலமான வடகிழக்கு பருவமழை காலத்தோடு ஒத்துப்போகிறது.
இந்த ஆண்டின் மழைப்பொழிவில், சென்னை 62 சதவீதத்தையும், தமிழகம் ஒட்டுமொத்தமாக 48 சதவீதத்தையும் இந்த வடகிழக்கு பருவமழை மூலமே பெறுகின்றன.
எல் நினோ காலம் பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழையை பலவீனப்படுத்தி இந்தியாவின் பல பகுதிகளில் மழைப்பொழிவை குறைக்கும் தன்மை கொண்டது. ஆனால், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான தமிழகத்தின் வடகிழக்கு பருவமழைக்கு இது சாதகமாக அமைந்து, வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இருப்பினும், வடகிழக்கு பருவமழையின் செயல்பாடு எல் நினோவை மட்டும் சார்ந்தது அல்ல என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய பெருங்கடல் இருமுனைவு, மேடன் ஜூலியன் அலைவு, வங்காள விரிகுடா கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் புயல் சின்னங்களின் நகர்வு போன்ற பல்வேறு காரணிகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதார ணமாக, 2015 சென்னை பெருவெள்ளத்தின் போது தீவிர எல் நினோ ஒரு கார ணமாக இருந்தபோதிலும், வங்காள விரிகுடாவின் வழக்கத்திற்கு மாறான வெப்பநிலையும் சமமான பாதிப்பை ஏற்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போதைய எல் நினோ தாக்கத்தால் இந்திய பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வரும் ஏப்ரல் மற்றும் மே 2027 வரை இயல்பை விட அதிகமாகவே நீடிக்கும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. கடல் நீர் வெப்பமடைவதால் பவளப்பாறைகள் வெளி றிப்போதல், கடல் வெப்ப அலைகள் உருவாதல் மற்றும் மீன் வளம் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்ப டும். இதனால் மீன்கள் குளிர்ந்த நீர் நிலைகளை நோக்கி இடம்பெயரலாம் அல்லது அவற்றின் இனப் பெருக்கம் மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் வங்காள விரிகு டா கடல் பகுதி கொந்த ளிப்பாக காணப்படுவதால், இந்தியாவின் கிழக்கு கடற்க ரை பகுதியில் கடல் அரிப்பு மற்றும் வெள்ள அபாயம் அதிகரிக்கக்கூடும்.
அதே நேரத்தில், அரபிக்கடல் மற்றும் மேற்கு கடற்கரை பகுதி வழக்கத்தை விட அமைதியாக இருக்க வாய்ப்பு உள்ளதால், அங்கு கடல்சார் துறைகளின் செயல்பாடுகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேற்கு கடற்கரையில் கடல் அரிப்பு மற்றும் வெள்ள பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் என்று ஆராய்ச்சியாளர் தெரிவித்து உள்ளார்.
கடந்த 1875 முதல் 1997 வரையிலான இந்திய வானிலை துறையின் நீண்டகால தரவுகளை ஆய்வு செய்ததில், எல் நினோ ஆண்டுகளில் தெற்கு தீபகற்ப இந்தியாவில் வடகிழக்கு பருவமழை பொதுவாக அதிகமாகவே இருந்துள்ளது தெரியவந்து உள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 22 எல் நினோ ஆண்டுகளில் 17 ஆண்டுகள், தமிழகத்தில் வழக்கத்தை விட கூடுதல் மழையே பதிவாகி உள்ளது.
இந்தியாவின் பருவமழை, கடல் சூழல் மற்றும் கடல்சார் வணிகத்தில் எல் நினோ ஏற்படுத்தப்போகும் தொடர் மாற்றங்களை கண்காணிப்பதற்காகவே இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் இந்த மாதாந்திர சிறப்பு அறிக்கைகளை வெளியிடத்தொடங்கி உள்ளது.