

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி எழும்பூரில் போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், 'நீட்' தேர்வுக்கு எதிராகவும் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாலன் இல்ல வளாகத்தில் அமர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் 'நீட்' தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் எல்.ஜி.கார்டன் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு பேரணி நடத்தினார்கள். பேரணி முடிவில் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
சென்னை தி.நகரில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 3-வது நாளாக தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் சென்னை எழும்பூரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோல், திருவொற்றியூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், சென்னை ராயப்பேட்டையில் புதுக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.