

கோவையில் தனியார் கல்லூரியில் படித்து வந்த முதலாம் ஆண்டு மாணவர், போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவித்ததற்காக போதை பழக்கத்தில் ஈடுபட்ட மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், அதை மாணவர்கள் இடையேயான கோஷ்டி மோதல் என்று திசை திருப்பும் வகையில் வழக்கை முடித்து வைக்கப்பார்க்கிறது தவெக அரசு.
கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் அளித்த பின் பாதுகாக்கத் தவறியதால்தான், அம்மாணவர் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் கூறும் நிலையில், பலியான அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு?
இந்தக் கொலையைச் செய்தவர்கள் மட்டுமின்றி, பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறையினரையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து இவர் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் விடுதியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அமுதன் விடுதியில் இருந்து வெளியேறி ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனது நண்பர்களின் அறையில் தங்கியிருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை அமுதன், அவரது நண்பரான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமன் (19) என்பவருடன் மலுமிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது சில மாணவர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர்.
அவர்கள் நடந்து சென்ற அமுதன் மற்றும் ஸ்ரீமன் ஆகியோரை தங்களுடன் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். பின்னர் எங்கள் அறைக்கு வந்து செல்போன் பறித்து சென்றது நீங்கள் தானே என கேட்டு அவர்கள் அமுதனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அமுதன், வேதனை தாங்க முடியாமல் தனது அறைக்கு சென்று ஓய்வெடுத்துள்ளார். மாலையில் கல்லூரி முடிந்து திரும்பிய நண்பர்கள், அமுதன் காயங்களுடன் அசைவற்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவரை மீட்டு பக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அமுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சக மாணவர்கள் 5 பேர் அவரை அடித்ததில் அவர் இறந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்களில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா ஏ.மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆராமுதன் (வயது 20), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்கரையைச் சேர்ந்த அரவிந்த் (21), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சிவரோகித் (20), பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சாத்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மணிபாலு (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். அமுதன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒரு மாணவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட அமுதன் உடல், கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், அமுதனின் பெற்றோர், தனது மகன் சக மாணவர்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாக புகார் அளித்தார். இதனால் மாணவர்கள் கோபமடைந்து தனது மகனை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். கல்லூரியின் பெயரை காப்பாற்ற போலீசார் அவர்களுடன் சேர்ந்து இதை மாணவர்களுக்கு இடையிலான மோதல் என்று சொல்வதாக குற்றம்சாட்டினனர்.
அமுதன் கொலை தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் திமுக சார்பில் கொடுக்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது தீர்மானம் துறைக்கு அனுப்பப்பட்டு முறையான விவரங்கள் வழங்கப்படும் என்றார். மேலும், கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.