

தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகக் தனிச்சட்டம் இயற்றப்படும் என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணவப்படுகொலை தடுப்பு ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் உடன் ஆலோசித்து நிச்சயம் சட்டம் இயற்றப்பட்டு, நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் வன்னி அரசு.,
“வன்கொடுமைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், சமத்துவம் மற்றும் சமூகநீதியை நிலைநாட்டி, அனைவரிடையேயும் இணக்கமான சூழலை உருவாக்க அரசு முயன்றுவருகிறது.
இருப்பினும் தங்கள் சொந்தப் பிள்ளைகளையே ஆணவக்கொலை செய்யும் சம்பவல்கள் சமூகத்தில் அரங்கேறி வருகின்றன.
சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் ஆணவப்படுகொலை சம்பவங்களை தடுப்பதற்கு, சிறப்பு சட்டம் இயற்றுவதற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு அரசு அலுவலர்களுடனும் கலந்து ஆலோசித்து கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளது. மேலும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து கருத்துகளைப் பெற்று அறிக்கை தயார் செய்யவேண்டிய நிலை உள்ளதால், பாஷா குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்ட உடன், ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என்று திறந்த மனதோடு அறிவிக்கிறேன்.” என தெரிவித்தார்.