

வட சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான அனைத்து சிகிச்சை பிரிவுகளும் ஒரே இடத்தில் செயல்பட புதிய கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் சிகிச்சை, மருந்து, பரிசோதனை உள்ளிட்ட சேவைகளை விரைவாக பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வட சென்னையில் உள்ள ஏழை, நடுத்தர மக்களின் மருத்துவ தேவைகளை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை பூர்த்தி செய்து வருகிறது. மேலும் திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநில மக்களும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
பல்வேறு சிறப்பு பிரிவுகள் இங்கு இருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் பரிந்துரைக்கப்படுகிறார்கள். தினமும் சராசரியாக 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை எவ்வித செலவு இல்லாமல் கிடைப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புற நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அதற்கேற்ற வசதிகளை செய்ய ஆஸ்பத்திரி நிர்வாகம் திட்டமிட்டது. புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தரை மற்றும் 2 தளங்களுடன் கூடிய இந்த பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி கடந்த 3 மாதமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைய கூடிய நிலையில் உள்ளன. இன்னும் 20 நாட்களில் புதுப்பிக்கப்பட்ட புறநோயாளிகள் கட்டிடம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. புறநோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகளை இந்த ஒரே கட்டிடத்தில் கொண்டு வரப்படுகிறது. இதுவரையில் தனித்தனியாக ஒவ்வொரு மருத்துவத் துறைக்கான புறநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வந்தது. தற்போது இந்த புதுப்பிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் அனைத்து புற நோயாளிகள் பிரிவும் செயல்பட உள்ளன. மருத்துவ சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு, காது மூக்கு தொண்டை, கண், பிசியோதெரபி சிகிச்சை, பாலியல் நோய்க்கான சிகிச்சை, தோல், யோகா, ஆயுஷ், மற்றும் ரேடியாலஜி உள்ளிட்ட அனைத்து துறை மருத்துவ சிகிச்சைகளுக்கான புற நோயாளிகள் பிரிவும் இக்கட்டிடத்தில் செயல்பட உள்ளன.
மேலும் நோயாளிகள் பரிசோதனை செய்வதற்காக வேறு இடத்திற்கு அலைய வேண்டிய தேவையில்லை. மருந்து வாங்கவும் வேறு இடத்திற்குச் செல்ல தேவையில்லை. இவை அனைத்தும் ஒரே இடத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முன்பு 3 மருந்தகங்கள் தனித்தனியாக செயல்பட்டு வந்தன. தற்போது மருந்து வழங்குவதற்கு 6 கவுண்டர்கள் அமைக்கப்படுகிறது. இது தவிர நோயாளிகள் காத்திருக்கும் பகுதி 2 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. புறநோயாளிகள் சீட்டு வழங்குவதற்கு முன்பு 4 கவுண்டர்கள் இருந்தன. தற்போது 9 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. தாமதம் இல்லாமல் விரைவாக சிகிச்சை பெற வசதியாக இந்த ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் நோயாளிகள் ஒவ்வொரு பிரிவுக்கும் எளிதாக செல்ல வரைபடம் தெளிவாக வைக்கப்பட்டு உள்ளது. படிக்காதவர்கள் கூட புரிந்து கொண்டு தாங்கள் செல்ல வேண்டிய புறநோயாளிகள் பிரிவுக்கு செல்ல இது வழிகாட்டும் என்று மருத்துவமனையின் உள் தங்கும் மருத்துவர் வனிதா மணி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
புதுப்பிக்கப்பட்டு உள்ள இந்தக் கட்டிடத்தில் புறநோயாளிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. யாருடைய உதவியும் இல்லாமல் இந்தக் கட்டிடத்தின் எந்த பகுதிக்கும் செல்வதற்கான விளக்க வரைபடங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்து செல்ல முடியும்.
நோயாளிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை தவிர அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.
இது தவிர நோயாளிகள் வீட்டில் இருந்து கொண்டே மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான நுழைவு சீட்டை நலம் செயலி மூலம் பெறலாம். அது பற்றிய விழிப்புணர்வும் புறநோயாளிகளுக்கு செய்யப்படுகிறது.
ஆதார் எண்ணை அவர்களின் செல்போனுடன் இணைத்து புறநோயாளிக்கான அட்டையை பெற்றுக்கொள்ளலாம். மேலும் நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக 2 இடங்களில் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இனிமேல் புறநோயாளிகள் அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து மருத்துவ துறை சார்ந்த புறநோயாளிகளும் ஒரே இடத்தில் சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த புறநோயாளிகள் பிரிவு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.