

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 'ஜெம்' கிரானைட் தொழிலதிபர் வீரமணி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், உதவியாளர் கணேசன், மேலாளர் சக்திவேல் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
'ஜெம்' வீரமணிக்கு எதிரான பரபரப்பான போக்சோ வழக்கில், கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி மற்றும் அவரது இரு ஓட்டுநர்கள் மீது 720 பக்க குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்ட 46 நாட்களிலேயே, 40 சாட்சிகளை கொண்ட இந்த இறுதி அறிக்கை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வீரமணிக்கு எதிரான முந்தைய வழக்கு மற்றும் அது தொடர்பான விவகாரங்களை விசாரிக்க, சென்னை பெருநகர காவல் ஆணையரின் மேற்பார்வையில், காவல்துறை தலைமை இயக்குநரால் செப்டம்பர் 24 அன்று இந்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு அமைக்கப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது தாய்மார்களின் புகார்களின் அடிப்படையில், மொத்தம் ஒன்பது பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கிய ஏழு புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் செப்டம்பர் 27 அன்று பதிவு செய்யப்பட்ட அந்த ஏழு வழக்குகளில் ஒன்றாகும்.
காவல்துறையின் தகவல்படி, முதன்மை குற்றவாளியான வீரமணி, அந்தச் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார். அவரது ஓட்டுநர்களான பார்த்திபன் (இரண்டாவது குற்றவாளி) மற்றும் பாபு (மூன்றாவது குற்றவாளி) ஆகியோர், குற்றம் நடப்பது குறித்து தெரிந்திருந்தும், பாதிக்கப்பட்ட சிறுமியை வீரமணியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதற்காகவும், மீண்டும் கொண்டு வந்து விட்டதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று குற்றவாளிகள் மீதும் போக்சோ (POCSO) சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த குற்றப்பத்திரிக்கையில், ஜெம் வீரமணி மீதான வழக்கை முறையாக கையாளவில்லை என அருண் ஐ.பி.எஸ்., சென்னையில் கூடுதல் காவல் ஆணையராக இருந்த கண்ணன், உதவி ஆணையர் யாஷ்மின் உள்ளிட்ட 7 காவல் அதிகாரிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து அருண் ஐ.பி.எஸ்., உள்பட 7 காவல் அதிகாரிகளின் மீது சிறப்புப் புலனாய்வுக் குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.