

நிலத்தை அடிப்படையாகக் கொண்டே முதுகலை சித்த மருத்துவ படிப்பில் 30 மாணவர்கள் வரை சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் கல்லூரியில் முதுகலை உள்ளிட்ட உயர் கல்வி படிப்புகளை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்படும்
நெல்லை வண்ணார்பேட்டை இ.எஸ்.ஐ. மருத்து வமனை அருகில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதி நிலம் உள்ளது.
இந்த நிலத்தை தற்போது இ.எஸ்.ஐ. மருத்துவமனை விரிவாக்க பணிகளுக்காக கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சித்தா கல்லூரி மாணவர்கள் இன்று காலை முதல் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 500-க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை சித்த மருத்துவ மாணவர்கள் பங்கேற்றுள்ள இந்த அடையாள போராட்டம், இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. போராட்டத்தால் கல்லூரியின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
முதுகலை சித்த மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்துவதற்கு சுமார் 8 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தற்போது இந்த நிலத்தை அடிப்படையாகக் கொண்டே முதுகலை சித்த மருத்துவ படிப்பில் 30 மாணவர்கள் வரை சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் கல்லூரியில் முதுகலை உள்ளிட்ட உயர் கல்வி படிப்புகளை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதனிடையே, மருத்துவ மனைக்காக மாநகராட்சி சார்பில் கொண்டுவரப்பட்ட குடிநீர் வாகனத்தையும் மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்தனர். இதையடுத்து அந்த குடிநீர் வாகனம் திருப்பி அனுப்பப்பட்டது. தங்களது கோரிக்கைகள் குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் திங்கட்கிழமை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.