தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு மீட்பு கோரிக்கை வேண்டாம் என்று எடுத்துரைப்போம்- செல்வப்பெருந்தகை

அண்ணாமலை தொடர்ந்து, விமர்சித்து வருவது கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் பற்றி புரிதலோடு பேசவேண்டும்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு மீட்பு கோரிக்கை வேண்டாம் என்று எடுத்துரைப்போம்- செல்வப்பெருந்தகை
Published on

சென்னை:

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கச்சத்தீவு விவகாரத்தில் 1974 மற்றும் 1976-ல் நடந்த கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பான குறும்படத்தை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்ட விவகாரத்தில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மிகப்பெரிய ராஜதந்திரத்துடன் செயல்பட்டார் என்பது வரலாறு. ஆனால், அந்த வரலாற்றை அறியாமல், வரலாற்றை படிக்காமல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்.

கச்சத்தீவில் மனிதர்கள் வாழ தகுதியற்ற 285 ஏக்கர் மட்டுமே இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அதேநேரம் பல்வேறு வளங்கள் நிறைந்த 4 ஆயிரம் சதுரமைல் பகுதி இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. இது ராஜதந்திரமா இல்லையா? இது ராஜதந்திரம் என்று அவரது கட்சி பிரதமர் வாஜ்பாய், இந்திரா காந்தியை துர்காதேவி என்று பாராட்டினார்.

தற்போது, மத்திய மந்திரி ஜெய்சங்கரும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு அது முடிந்து போன விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார். அப்படி இருந்தும் அண்ணாமலை தொடர்ந்து, விமர்சித்து வருவது கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் பற்றி புரிதலோடு பேசவேண்டும். தொடர்ந்து, பேசினால் இன்னும் பல ஆதாரங்களை வெளியிடுவோம்.

இந்தியாவின் வடபகுதியில் சீனா பல லட்சம் சதுரகிலோ மீட்டரை ஆக்கிரமித்து, மாண்ட்ரின் எழுத்துக்களோடு பல கிராமங்களுக்கு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வேங்கை வயல் விவகாரத்தில், புகார் கொடுக்க சென்ற நிரபராதிகளே குற்றவாளிகள் ஆக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, கச்சத்தீவு மீட்போம் என்று உங்கள் கூட்டணி கட்சி தி.மு.க.வும் தொடர்ந்து பேசி வருகிறதே என்று கேட்டபோது, நாங்கள் வரலாற்றை வெளியிட்டுள்ளோம். வரும் காலங்களில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கச்சதீவை மீட்போம் என்ற வாக்குறுதி வேண்டாம் என்று எடுத்து கூறுவோம்.

தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் ஓ.பி.சி. சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு கூட்டம், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தலைமையில், ஓ.பி.சி. தலைவர் டி.ஏ. நவீன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், அகில இந்திய காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை தலைவர் அஜய்சிங் யாதவ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com