என்எல்சி பங்குகள் விற்பனை..!- மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது!
MP Su Venkatesan
Published on

என்.எல்.சி (NLC) பங்குகளை விற்பனை செய்யும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு மதுரை மக்களவை தொகுதி எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC) நாட்டின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் முதுகெலும்பாக உள்ளது. ஏற்கனவே 72% பங்குகளை மட்டுமே கொண்டுள்ள அரசு, தற்போது கூடுதலாக 3% பங்குகளை விற்பனை செய்வது கண்டிக்கத்தக்கது.

அரசின் இந்த செயல் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, தேச இறையாண்மை மற்றும் சமூக நீதியைக் கேள்விக்குறியாக்கும்.

இது குறித்து ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளேன். லாபகரமாக, திறமையாக இயங்கும் என்.எல்.சி பங்கு விற்பனை ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது!

மிகச் சிறந்த நிறுவனங்களில் ஒன்றும், மிகுந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான என்.எல்.சி. இந்தியா லிமிடெட் (NLCIL) நிறுவனத்தில் ஒன்றிய அரசு தனது 3% பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பது ஆழ்ந்த கவலை அளிப்பதாகும். கடந்த 26 ஆண்டுகளில் அடுத்த அடுத்த பங்கு விற்பனைகள் மூலம் அரசின் மூலதனப் பங்கு 72.2% ஆக குறைக்கப்பட்டது. தற்போதைய 3% பங்கு விற்பனை அரசுடமையை மேலும் பலவீனப்படுத்தும்.

பொதுத்துறை நிறுவனங்கள் திறனின்மை மற்றும் இலாபமின்மை காரணமாக அரசுக் கருவூலத்திற்கு சுமையாக உள்ளன எனப் பல பத்தாண்டுகளாக, தனியார்மய ஆதரவாளர்கள் வாதாடி வந்துள்ளனர். அரசின் பங்கு விலக்கம் (Disinvestment) மற்றும் தனியார்மயத்தை நியாயப்படுத்துவதற்காக மீண்டும் மீண்டும் இந்த வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இன்றோ முற்றிலும் நேர்மாறான அணுகுமுறை கையாளப்படுகிறது.

திறமையாக நிர்வகிக்கப்படும், இலாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், வருவாயை ஈட்டித் தரும் வலிமையான நிறுவனங்களாக இருப்பதாலேயே பங்கு விலக்கலுக்கு இலக்காக்கப்படுகின்றன. இது தேச செல்வத்தை படிப்படியாக பெருநிறுவனங்களின் நலன்களுக்காக தாம்பாளத்தில் வைத்து கைமாற்றம் செய்யும் ஒரு பறிமுதல் நடவடிக்கையே அன்றி வேறொன்றுமில்லை.

அரசின் கொள்கையில் நிலவும் ஒரு தீவிரமான முரண்பாட்டை இது வெளிப்படுத்துகிறது. தேசியச் சொத்துகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, நாட்டின் நீண்டகால பொருளாதார மற்றும் கேந்திர நலன்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வரும் நிறுவனங்களின் அரசுடமையை படிப்படியாக நீர்க்கச் செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

என்.எல்.சி இந்தியா என்பது வெறும் இலாபம் ஈட்டும் நிறுவனம் மட்டுமல்ல. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு, நிலக்கரி உற்பத்தி, மின் உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றும் ஒரு இன்றியமையாத தேசியச் சொத்தாகும். நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும், எரிசக்தி தற்சார்புக்கும் அதன் பங்களிப்பு அளப்பரியது.

2025–26 நிதியாண்டில் என்.எல்.சி. இந்தியா வெளிப்படுத்தி உள்ள சிறப்பான செயல்பாடு இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. தனது வரலாற்றிலேயே அதிகபட்சமாக ₹3,769 கோடி ஆண்டு இலாபத்தை இந்த நிறுவனம் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ₹2,714 கோடி இலாபத்தை விட 38.91% அதிகமாகும்.

இவ்வாறு சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிறுவனத்தின் பங்குகளை நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டும் நோக்கில் விற்பனை செய்வது குறுகிய கால நிதி வருவாயை அரசுக்கு தரக்கூடும். ஆனால், பல பத்தாண்டுகளாக நாட்டிற்கு மதிப்பை உருவாக்கி தந்து கொண்டிருக்கும் ஒரு கேந்திர தேசியச் சொத்தின் மீதான அரசின் உரிமையை அது பலவீனப்படுத்தும்.

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான வழி, இலாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் உரிமையை படிப்படியாகக் குறைப்பதில் இல்லை. மாறாக, செல்வந்தர்களுக்கு கூடுதல் வரி விதிப்பதன் மூலம் அரசின் வருவாயைப் பெருக்க வேண்டும். அதற்காக சூப்பர் ரிச் வரி, கார்ப்பரேட் வரி உயர்வு, வாரிசுரிமை வரி உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், என்.எல்.சி. தமிழ்நாட்டின் பெருமையாக மட்டுமல்லாமல், மாநிலத்தின் முற்போக்கான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியோடும் பிரிக்க முடியாத வகையில் இணைந்துள்ளது. அரசின் பங்குகளை படிப்படியாகக் குறைக்கும் இந்த நடவடிக்கை, இறுதியில் தனியார்மயத்தையே நோக்கமாகக் கொண்டது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இத்தகைய நடவடிக்கை நாட்டின் பொருளாதார இறையாண்மையை மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) ஆகியோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிச் செயல்முறைகளையும் பாதிக்கும்.

என்.எல்.சி.யில் பங்கு விலக்கம் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போது, ஒவ்வொரு முறையும் மக்கள் மாபெரும் போராட்டங்கள் மூலம் வலுவாக எதிர்த்துள்ளனர். மீண்டும் அதே முயற்சியை மேற்கொள்வது மக்கள் கருத்துக்கு எதிரானதுடன், ஜனநாயக விரோதமான செயலாகும்.

எனவே, என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் கொள்கையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறும், தேச வளர்ச்சி மற்றும் பொருளாதார இறையாண்மையின் கருவிகளாகத் திகழும் இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்து வலுப்படுத்தும் உறுதிப்பாட்டை ஒன்றிய அரசு வெளிப்படுத்த வேண்டுமென்றும், தேச நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரி மாண்புமிகு ஒன்றிய நிலக்கரி & சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com