

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன். மாற்றுத்திறனாளியான இவர் தனது வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். அந்த கடையில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்ததாக கூறி சபரி வர்மனை தென்தாமரை குளம் போலீசார் கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் அவர் சிறைக்குள் வைத்தே அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சபரிவர்மனை கை-கால்களை கட்டி வைத்து கொடூரமான முறையில் தாக்கி கொன்ற 3 சிறைக் காவலர்கள் மற்றும் 8 விசாரணை கைதிகள் என 11 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் நாங்குநேரி சிறையிலும், கைதிகள் பாளையங்கோட்டை மத்திய சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை தொடர்பாக நேசமணி நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்களும் உடனடியாக விசாரணையை தொடங்கினர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு சாஜிதா நாகர்கோவில் சிறைக்கே சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 கைதிகளிடமும், நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக் காவலர்கள் 3 பேரிடமும், நெல்லை மற்றும் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் சபரிவர்மனின் கை மற்றும் கால்களை லுங்கியால் கட்டிவைத்து சரமாரியாக அடித்து கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. சபரிவர்மன் கொலையில் மேலும் பல தகவல்களை திரட்டுவதற்காக சிறைக் காவலர்கள் மற்றும் கைதிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில் நாகர்கோவில் சிறை துணை ஜெயிலராக இருந்த சம்பத், பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, பாளையங்கோட்டை சிறையின் துணை ஜெயிலராக இருந்த பழனி ராஜன், நாகர்கோவில் துணை ஜெயிலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் சபரிவர்மன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சிறைக்காவலர்கள் 3 பேருக்கும் பதிலாக பாளையங்கோட்டை சிறையில் இருந்து 3 புதிய சிறை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று அல்லது நாளை பொறுப்பேற்பார்கள் என தெரிகிறது.